- வன்னியின் அருகிப்போன வளம்..! 'வன்னி நாடு வளர் சோலை நாடு வரியம் மூன்றும் விளைவுள்ள நாடு' எனும் நாட்டார் பாடல் வன்னியின் வளத்தின...
- வன்னியின் அருகிப்போன வளம்..!
'வன்னி நாடு வளர் சோலை நாடு
வரியம் மூன்றும் விளைவுள்ள நாடு'
எனும் நாட்டார் பாடல் வன்னியின் வளத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. வன்னிக் கிராம மக்கள் காடு, வயல், குளம், என இயற்கையோடு இணைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
வேளாண்மையை மேற்கொள்ளுதல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் மூலம் ஈட்டும் வருமானத்திலேயே உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து அவற்றில் எஞ்சியவற்றினை விற்பனை செய்து சேமிப்பாக்கி வாழும் வாழ்க்கை முறையினை இன்றும் வன்னி மண்ணில் காணலாம்.
வன்னி வாழ்க்கை முறை அடையாளங்களில் ஒன்று தான் 'குதிர்'. நெல்லை சேமிக்கப் பண்டைய மக்கள் கண்டறிந்த அற்புதக் களஞ்சிய அறையே குதிர் ஆகும். உலகெங்கிலும் உள்ள பல்வேறுபட்ட இன மக்கள் விதவிதமான குதிரைப் பயன்படுத்தியுள்ளனர். தமிழர்களின் வாழ்வியல் மாற்றமடைய மற்றைய இடங்களில் இதனைக் கைவிட்ட போதும் நெல் உற்பத்தி அதிகமுள்ள வன்னியில் வாழ்வியல் அகலாத கிராமங்களில் வன்னியில் ஆங்காங்கு குதிர்கள் இன்றும் பாவனையில் உள்ளன.
வன்னியில் குதிர் உள்ளமுக்கிய இடங்களாகக் குமுழமுனை, முள்ளியவளை ஆகிய கிராமங்கள் காணப்படுகின்றன. வன்னி மண்ணில் குதிர் என்ற பதத்தை வேறு விதமாகவும் அழைப்பார், வழக்கத்தில் 'கொம்பறை'என்ற சொற் கொண்டும் அது அழைக்கப்படுகின்றது.
கொம்பறையின் தோற்றம்
ஆதிகாலம் தொடக்கம் இன்று வரை நாட்டின் முதுகெலும்பாக விவசாயமே திகழ்கின்றது. அதிலும்,நெற் பயிர்ச் செய்கை என்பது இன்றியமையாத ஒன்றாகவே காணப்பட்டது. இப் பயிர்ச் செய்கை பண்டைய காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டே மக்கள் மன்னனுக்குச் செலுத்த வேண்டிய வரியை நெல்லாகச் செலுத்தினார்கள். அவ்வாறு மக்களால் வழங்கப்பட்ட நெல்லினைப் பாதுகாப்பாக வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே கொம்பறையாகும். முன்னைய காலங்களில் அறுவடைக்குச் சென்றால் நெல் தானியங்களை மட்டுமே கூலியாகப் பெறுவது வழக்கம்.
இவ்வாறு கூலியாகப் பெற்றுவந்த நெல்லையும் வீட்டில் உள்ள குதிர்களில் சேமித்து வைப்பது வழக்கம். அவ்வப்போது குடும்பத் தேவைகளுக்கும் அவசர தேவைகளின் போதும் மற்றும் பஞ்சம் ஏற்படும் காலங்களிலும் நெல்லை விற்று பணமாகப் பயன்படுத்தி வந்தனர்.
கொம்பறையின் அமைப்பு முறை
குதிர் அல்லது கொம்பறையானது வட்ட வடிவமாக அகன்ற உருளைவடிவில் காணப்படும். உயரமான கப்புகள் நடப்பட்டு (முதிரைமரம்) ஒரு அடி அல்லது வசதிக்கேற்ற உயரத்தில் தட்டு அமைத்து (முதிரைப்பலகை) வட்ட வடிவ சுவர் அமைக்கின்றனர். இதனை அமைப்பதற்கு களி மண் மற்றும் காட்டுத்தடிகளே பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் தடிகளைக் குறுக்காக அடுக்கி தட்டினை அமைப்பார்கள். அதன் பக்கவாட்டில் உருளை வடிவச் சுவர் அமைக்கப்பட்டு அப்படியே காட்டுத் தடிகளை வளைத்து (கறனை, காயாம் தடிகள்) ஒரு வகைக் கொடியான வெப்பிள் கொடியினால் நெருக்கமாக வரிவார்கள்.
பின்னர் குளம், புற்று போன்ற இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட செங்களி மண்ணால் பூசி,மண் சுவர் போன்று அமைப்பாக்குவார்கள்.இந்தக் களி மண்ணைக் குழைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறவிட்டு அதன் பின்பே பயன்படுத்துவார்கள். மண் மீது சாணம் கொண்டு அழுத்தமாக மெழுகுவார்கள். இதன் கீழ்ப் பகுதியை, அக்காலத்தில் பெண்கள் தமது விசேட தினங்களில் உணவு சமைப்பதற்காகவும், தேங்காய்களைச் சேமிப்பதற்காகவும் பயன்படுத்தினார்கள்.
வீடு மெழுகும் நாட்களில் கொம்பறையையும் மாட்டுச் சாணத்தால் மெழுகும் வழக்கம் காணப்பட்டது. இதன் மேற்பகுதி ஓலையால் வேயப்பட்டிருக்கும். சுவரில் முக்கோண வடிவில் சிறிய பாதை வைப்பார்கள். உள்ளே இருக்கும் நெல்லினை எடுப்பதற்கு அல்லது உள்ளே நெல்லினை இடுவதற்கு இதனைப் பயன்படுத்துவார்கள்.
சில கொம்பறைகளில் கூரையை அப்பால் தூக்கிவைத்து விட்டு நெல்லினை எடுப்பதோ அல்லது அதற்குள் இடுவதாகவோ வசதி அமைந்திருக்கும். அக் காலத்தில் கொம்பறையை வைத்திருப்பவர்கள் வசதி படைத்தவர்களாகக் கருதப்படுவர். இதனை அமைக்க முடியாதவர்கள் 'பட்டடை' என்ற பாதுகாப்பு முறையினை வீட்டிற்குள் அமைப்பார்கள். ஆனால், இதற்குள் சேமிக்கப்படும் நெல் நீண்டகாலம் பாதுகாக்க முடியாமல் போய் விடும்.
கொம்பறையில் நெல்லினை சேமிப்பதற்கான காரணம்
ஆரம்ப காலங்களில் கொம்பறையில் நெல்லினைச் சேமிக்கும் போது நெல்லானது பூச்சிகளினால் ஏற்படுத்தப்படும் சேதங்களிலிருந்தும் மழையால் ஈரப்பதமாகுதல், பூஞ்சணம் பிடித்தல் போன்ற பாதிப்புக்குள்ளாகும் தன்மையிலிருந்தும் பாதுகாக்கப்படுவதாக அமைந்திருந்தது.
இங்கு இயற்கை முறையில் நெல்லினைச் சேமிப்பதனால் உண்ணும் மக்களுக்கு அவற்றால் கேடு விளைவதில்லை. பூச்சிகள் தாக்காமல் இருக்க இயற்கை மூலிகைகள் குறிப்பாக பூச்சிவிரட்டி மூலிகைகளைப் பயன்படுத்துவது வழக்கமாகும். குதிரில் வைக்கப்படும் நெல் இரண்டு ஆண்டுகள் வரை பழுதடையாது இருக்கும்.
குதிரில் இடப்படும் நெல்லினை வளர்பிறையில் பிள்ளைகள் கையால் இட்டால் நெல் வளம் எப்போதும் குறையாது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. குதிரில் இருந்து நெல்லை எடுக்கும்போது நல்ல நாள் பார்த்துத்தான் எடுப்பார்கள். தைப்பொங்கல், சித்திரைத் திருநாள் போன்ற விசேட நாட்களிலெல்லாம் குதிருக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து வழிபடும் வழக்கம் எமது மக்களிடம் காணப்பட்டது.
இது குறித்து முள்ளியவளையிலுள்ள சமூக ஆர்வலரான ஆறுமுகம் முருகுப்பிள்ளை,' கூறும் போது, இன்றைய நிலையில் அரசு அதிகளவில் தானியக் கிடங்குகளை அமைத்துள்ளது. ஆனால் தானியங்கள் அவற்றில் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான். இன்றைய தானியக் கிடங்குகளின் முன்னோடியே அக்காலக் கொம்பறைகள் தான்'என்றார்.
கூடி வாழ்ந்து,கூடிப் பயிர் செய்து கூடி உண்டு வாழும் கூட்டு வாழ்க்கை நமது பண்டைய வாழ்க்கை முறை. தற்காலத்தைப் போல் அல்லாது அக்காலமானது மிகவும் விஸ்தீரணமானது. ஒவ்வொரு கிராமமும் இராச்சியமும் பேரண்டந்தான்.
தேவைகளை எப்படிக் கையாள்வதென்ற அனுபவத்தில் தான் குதிரை அல்லது கொம்பறையை மக்கள் கண்டறிந்தனர். ஆரம்ப காலத்தில் கிராமமே ஒன்று சேர்ந்து சில பகுதிகளில் குதிர் அல்லது கொம்பறையில் நெல்லினைச் சேமித்து தேவைக்கேற்ப பகிர்ந்து எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால்,அப்படி சேமிக்கப்பட்ட பெரிய குதிர்களின் எச்சங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.
எமது கள ஆய்விற்காகச் சென்றபோது சந்தித்த ஊர்வாசிகள், 'முப்பது வருடத்திற்கு முந்திய காலத்தில் கொம்பறையில்லாத வீட்டை வன்னியில் பார்க்க முடியாது. இப்போது எல்லோருடைய வாழ்க்கையும் மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு சேமித்தது போய், அரசாங்கத்திற்கு மொத்தமாக விற்பனை செய்ய நெல்லை நெற் களஞ்சியசாலையில் மக்கள் சேமிக்கிறார்கள்'எனக் கூறுகிறார்கள்;.
முன்னரைப் போல பெருமெடுப்பில் வேளாண்மை செய்பவர்கள் தற்போது இல்லாமை, நவீன களஞ்சிய வசதிகள் உள்ளமை,போக்குவரத்து வசதிகள் அதிகரித்தமை போன்றன கொம்பறைகள் இன்றைய சூழ்நிலையில் அருகியதற்குக் காரணங்களாகும்.
இன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு கொம்பறையைப் பற்றித் தெரியாதிருப்பதை கள ஆய்வில் அறிய முடிந்தது. இதற்குக் காரணம், வன்னியில் ஏற்பட்ட யுத்தத்தின் போது படையினரால் இருந்த சில கொம்பறைகளும் அழிக்கப்பட்டு விட்டதாகும்.
மீள் குடியேற்றத்திற்குப் பின் குமுழமுனையில் மாத்திரம் கொம்பறைகள் சில அமைக்கப்பட்டாலும் முறையான கொம்பறைகளாக அவை காணப்படாமையால் விரைவாகவே அவையும் அழிவடையும் நிலையில் உள்ளன.
இன்றைய சமுதாயம் நவநாகரீக வளர்ச்சியினால் இவ்வாறான விடயங்களைத் தமது வீட்டில் வைத்திருப்பது அநாகரீகமாகக் கருதுகின்றனர். கொம்பறை வாழ்க்கைக்குத் திரும்பவேண்டுமெனக் கூறுவதெல்லாம் அதீதமான கருத்தாக இருந்தாலும் ,தமிழர்களின் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்கிலாவது கொம்பறைகள் பேணப்பட வேண்டும். நமது பாரம்பரிய வழித்தடத்தை நாளைய தலைமுறை அறிய அது வழி செய்யும்.
Subscribe http://bit.ly/3c44ZMv
ஜெகநாதன் கல்கி
இரண்டாம் வருடம்
ஊடகக்கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்



No comments