Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

யாழ் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் ...


யாழ் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி , மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார்.

நல்லூர் கந்தசுவாமியார் ஆலய தெற்கு வீதிப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில், படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் காரில் பயணித்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரும் துப்பாக்கி சூட்டியில் காயமடைந்த போதிலும் அவர் உயிர் தப்பியிருந்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் அது தொடர்பான கட்டளை வழங்கப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவரும் தொடர்ச்சியாக 16 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று அரச சட்டவாதி மன்றுக்கு தெரிவித்தார்.

“சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடவேண்டும் எனவும், ஒவ்வொருவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தலா இரண்டு சரீர பிணையாளிகளை முற்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.


சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் , சந்தேக நபர்கள் மூவரும் வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

No comments

Latest Articles