இந்தோனேஷியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக அதி...
இந்தோனேஷியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் ஆழிப்பேரலை காரணமாக இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது கடற்கரைகளில் நின்றிருந்தவர்கள் சிதறி ஓடியதாலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் பலர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7.5 ரிக்டர் பரிமாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட பலமான அதிர்வுகள் காரணமாக கடல் அலைகள் சுமார் 6 மீற்றர்கள் வரை மேலேழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் இன்று காலை முதல் கடற்கரைகளில் ஒதுங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கரையோர சுற்றுலாத்துறை நகரான பாலுவின் (Palu) கடற்கரையில் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேற முடியாமல் போனதால் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தங்களை அடுத்து 350 இக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷிய அனர்த்த கட்டுப்பாட்டு முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த பல குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
வான்படையின் பண்ட பறிமாற்றல் விமானங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்கள், மற்றும் மருத்துப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அத்துடன், மருத்துவ உதவிக் குழுவினரும் துரிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மின்சார துண்டிப்பு மற்றும் தொடர்பாடல் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.






No comments