சாவகச்சேரியில் உள்ள பினான்ஸ் தனியார் நிதி நிறுவனத்தில் 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாய் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட...
சாவகச்சேரியில் உள்ள பினான்ஸ் தனியார் நிதி நிறுவனத்தில் 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாய் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வங்கியில் கடமையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் தனது நண்பர் மற்றும் காதலன் ஊடாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டமை பொலிஸாரின் புலன் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸார் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பொலிஸாரால் வங்கி ஊழியரான பெண் மற்றும் அவரது காதலன் மற்றும் நண்பர் என மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமை காலை சாவகச்சேரியில் உள்ள பினான்ஸ் தனியார் நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி மற்றும் மாவட்ட புலனாய்வுப் பொலிஸார் குறித்த கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளில் குறித்த தினத்தில் காலை வெறும் 50 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே இல்லாமல் போன 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாவையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழுத்தொகை பணமும் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி இழப்பீட்டு காப்புறுதி பெற்றுக் கொள்ளவே தனது ஆண் நண்பர் ஊடாக இந்த கொள்ளை நாடகத்தை பெண் வங்கி ஊழியர் அரங்கேற்றியுள்ளமை கண்டறிந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராவில் கொள்ளையர்களை இனங்கண்டுள்ளனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் இலக்கம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
பின்னர் கொள்ளையர்கள் சென்ற வழியில் உள்ள சகல பாதுகாப்பு கமராக்களையும் பொலிஸார் கண்காணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஏ-9 வீதியில் ஏறும் போதே மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதனையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண், அவருடைய ஆண் நண்பர், அவருடைய நண்பர் என மூவரையும் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
குறித்த நிதிநிறுவன ஊழியரான பெண் கடந்த 18 ஆம் திகதியே கொள்ளை நாடகத்தை அரங்கேற்ற இருந்ததாகவும் அந்த சமயம் நிதி நிறுவனத்தில் ஏனைய உத்தியோகத்தர்கள் காணப்பட்டதால் கொள்ளை நாடகம் 19 ஆம் திகதி காலை ஏனைய ஊழியர்கள் வருவதற்கு முன்பாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 18 ஆம் திகதி இரவு கொள்ளையடிக்க வந்த ஆண் நண்பருடன் சாவகச்சேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் சென்றதையும் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை சாவகச்சேரி நீதிமன்றில் கைது செய்யப்பட்ட மூவரையும் முன்னிலைப்படுத்தினர்
விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் மூவரையும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். குறித்த குற்றச் செயலை கண்டுபிடிக்க சாவகச்சேரி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்கே, குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.விஜயகோன், உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், மாவட்ட புலனாய்வுக் குழு பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப், பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிசாந்த, பண்டார, ரத்னாயக்க, சுரேஷ், புவனச்சந்திரன் ,கருணாரத்ன, நவரத்தினம், தினேஷ், ரங்க ஆகியோரும், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சக்தி, பவணி, மாபோதி ஆகியோர் அடங்கிய குழு ஆறு தினங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களின் திட்டத்தை அம்பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



No comments