சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தன...
சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தனது ஐ.நா பொதுச் சபை உரையின் மூலம் நிரூபித்துவிட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்காக தமிழ் இனம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்ட டெலோ இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவராக மைத்ரிபால சிறிசேனவே இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நிவ்யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் செப்டெம்பர் 25 ஆம் திகதி உரையொன்றை ஆற்றியிருந்தார்.
இதன்போது தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனை தொடர்பிலோ அதற்கான தீர்வு குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்காத சிறிலங்கா அரச தலைவர், பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது ஆதரவை உலகத் தலைவர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.
மைத்ரிபால சிறசேனவின் இந்த உரை குறித்து ஐ.பீ.சி தமிழுக்கு கருத்துத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பாலஸ்தீன பிரச்சனையை ஆதரிக்கும் மைத்ரி, தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் ஒடுக்கப்படுவதை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரை “தனது பாதுகாப்புப் படையினர்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த மைத்ரிபால சிறிசேன, உலகத் தலைவர்கள் முன்னிலையில் சிறிலங்கா படையினருக்கு புகழாரமும் சூட்டினார்.
அதேவேளை யுத்தக் குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அழுத்தம் கொடுப்பதை கைவிடுமாறும் உலகத் தலைவர்களிடம் சிறிலங்கா அரச தலைவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லை என்று கூறிய சிறிலங்கா அரச தலைவரின் இந்த உரை, நிவ்யோர்க்கில் இருந்து தென் பகுதி சிங்கள மக்களை இலக்கு வைத்து நடத்திய தேர்தல் பிரசாரமாகவே அமைந்திருந்ததாகவும் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டினார்.
உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவை விடுவித்து, சுயாதீனமாக செயற்பட இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்த மைத்ரிபால, தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையை கொடுக்கத் தயாரா என்றும் சிவாஜிலிங்கம் அவரிடம் வினவியுள்ளார்.
இதேவேளை யுத்தக் குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சிறிலங்காவிற்கு தலையீடு தேவையில்லை என்று ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் கூறிய சிறிலங்கா அரச தலைவர், ஏன் ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உள்நாட்டில் கூறிவரும் கருத்தை அறிவிக்கவில்லை என்றும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் போர் குற்றவியல் நீதிமன்றிற்கு சிறிலங்காவின் பொறுப்புக் கூறல் விடையத்தை பாரப்படுத்துமாறு தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முள் குத்தும் போது உணரும் வலியைவிட, முள் குத்தியதை நினைக்கும் போதெல்லாம் ஏற்படும் வலி மிகவும் கொடூரமானது என்ற புத்த பெருமானின் போதனையை ஐ.நா பொதுச் சபை உரையின் போது சிறிலங்கா அரச தலைவர் சிறிசேன எடுத்துரைத்திருந்தார்.
அவர் கூறியது போல் புத்த பெருமானின் போதனை உண்மையானதே என்று தெரிவிக்கும் சிவாஜிலிங்கம், அந்த உண்மை மிகவும் மோசமான அழிவை தொடர்ந்தும் சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும் என்பதை ஏன் அவரால் உணர முடியாது போனது என்றும் வினவியுள்ளார்.
நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை குறித்து பேசிய சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறாது என்று கூறாததன் மூலம், தமிழ் மக்களை அச்சுறுத்தலுடன் வைத்திருக்க முற்பட்டுள்ளாரா என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.



ليست هناك تعليقات