Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

“14 குடும்பங்களின் பாதிப்பை வார்த்தையில் சொல்ல இயலாது” – ராஜீவ் கொலை சோகங்கள்!

`ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது’ என்று தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மனு, 7 பேர் விடுதலை விவகாரத்தில...


`ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது’ என்று தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மனு, 7 பேர் விடுதலை விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 வருடங்களாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேரை விடுவிக்கக்கோரி தமிழகம் முழுக்க பரவலாகக் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் `7 பேர் விடுதலை குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்’ என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையும் `7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்’ என ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.

இதையடுத்து அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் உடனடியாக விடுவிக்கக்கோரி ஆளுநர் உத்தரவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போது இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜீவ் படுகொலை சம்பவத்தின்போது, இறந்துபோனவர்களின் குடும்பங்களைச் சார்ந்தோர் ஒருங்கிணைந்து, நேற்றைய தினம் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், `ராஜீவ் கொலை சம்பவத்தில், எங்கள் 14 குடும்பங்களைச் சேர்ந்த நபர்களும் இறந்துபோயுள்ளனர். இதனால், தனித்தனியே ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறோம்.

இந்நிலையில், கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்வதென்பது, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலும் துன்பம் சேர்ப்பதாய் அமையும். எனவே, அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது’ என்று கோரியுள்ளனர்.

இந்நிலையில், 7 பேர் விடுதலைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருபவர்களோ, “7 பேர் விடுதலை அரசியலாக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் குடும்பமே அவர்களது விடுதலை குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இங்குள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரோ இந்த 7 பேரையும் சிறைத்தண்டனையிலிருந்து விடுவித்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒருகட்டமாக, ராஜீவ் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களைச் சந்தித்து அவர்களது உணர்ச்சியைத் தூண்டும்விதமாகப் பேசி ஒருங்கிணைத்துவருகிறார்கள்.

அப்படி வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கப்பட்டவர்களே ஆளுநரைச் சந்தித்தும் மனு அளித்திருக்கின்றனர். உண்மையில், அந்த 14 குடும்பங்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் இவ்விவகாரத்தில், 7 பேர் விடுதலையை ஆதரிப்பவர்கள்தாம்” என்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து ஆளுநரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்த காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பேச்சாளரும், கவிஞருமான ஜோதி ராமலிங்கத்திடம் இதுகுறித்துப் பேசினோம்…

“ஆட்டோ சங்கருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோதுகூட, அவனது தாயார் மத்திய சிறைச்சாலை சுவரில் ரத்தம் வருமளவுக்கு முட்டிக்கொண்டு அழத்தான் செய்தார். உலகமே எதிர்த்தாலும்கூட, தாய்ப்பாசம் என்றைக்கும் விட்டுக்கொடுக்காது அல்லவா… அதற்காக நியாயத்துக்கு எதிரானவர்களுக்குச் சட்டம் துணைபோய்விடக்கூடாதல்லவா.

ராஜீவ் படுகொலைச் சம்பவத்தின்போது, அவரோடு சேர்ந்து இறந்துபோனவர்களில் 14 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களது இழப்பால் தனிப்பட்ட முறையில், அவர்களது ஒவ்வொரு குடும்பமும் எந்தளவு பாதிக்கப்பட்டது என்பதை வார்த்தைகளில் சொல்ல இயலாது.

இறந்துபோன பெண் போலீஸ் அதிகாரி சந்திரா என்பவரின் மகள் அந்த அதிர்ச்சியில் புத்தி சுவாதீனமாகிவிட்டார். இது ஓர் உதாரணம் மட்டும்தான். இப்படி ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தனித்தனியே சோகக் கதை உள்ளது.

ஆனால், நாங்கள்தான் இவர்களையெல்லாம் தூண்டிவிட்டு விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வைப்பதாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பிவருகிறார்கள்.” என்றார் ஆதங்கத்துடன்.

`ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்’ என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

No comments

Latest Articles