வன்னியில் நடந்த இறுதிப் போரின்போது அழிவடைந்த பல எச்சங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் போரின் சாட்சியாக இன்றும்-இன்னும் சில ஞாபகச்...
வன்னியில் நடந்த இறுதிப் போரின்போது அழிவடைந்த பல எச்சங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் போரின் சாட்சியாக இன்றும்-இன்னும் சில ஞாபகச் சின்னங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.
அவற்றில் ஒன்றுதான் 2009ஆம் ஆண்டு இறுதி நாட்களில் புதுக்குடியிருப்பில் நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலின் எச்சம்.
பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அன்றைய காலத்தில் விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் இடம்பெற்ற இடம் தொடர்பான இருவேறு காட்சிகளைக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
அன்று சேரன் வாணிபம் என்ற பெயரில் இயங்கிய வர்த்தக ஸ்தாபனத்தையண்டிய சூழலில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியிருந்தன. அன்றைய போரின் சாட்சியாக வேப்பமரம் மட்டும் இன்றுவரை நிற்கின்றது. ஆனால் ஏனைய தளங்கள் முற்றிலும் மாற்றம்பெற்று நவீனப்படுத்தப்பட தோரணையில் காணப்படுகின்றன.
இதுதொடர்பில் வன்னியில் அன்றிருந்த முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு தனது முக நூலில் பகிர்ந்துள்ள அன்றைய நாட்களின் நினைவினை இங்கு தருகின்றோம்.
”ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பிளேட் மேக்கிங் இயந்திரத்தின் கண்ணாடி 2009 பெப்ரவரி 11 இல் எறிகணைத்தாக்குலில் நொறுங்கிவிட்டது. அக்கண்ணாடி இல்லாமல் பத்திரிகை அச்சிடமுடியாது. அதன் பின்னர் ஒன்பது நாட்கள் பத்திரிகை அச்சிடமுடியவில்லை. கண்ணாடி எடுப்பதற்காகவே புதுக்குடியிருப்பு நகரப்பகுதிக்கு சங்கீதன் அண்ணையும் நானும் சுகந்தன் அண்ணையும் சென்றிருந்தோம். அன்று தான் இந்த புகைப்படம் எடுத்திருந்தேன்.
அப்போது அப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக காணப்பட்டிருந்தது. பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகில் உந்துருளியினை நிறுத்திவிட்டு உள்வீதியால் நடந்தே சென்றிருந்தோம். "எப்ப இராணுவம் அந்த இடத்திற்கு வருவான் என்று யாருக்கு தெரியும். பயந்து பயந்து தான் போயிருந்தோம்." அன்றைக்கு நாங்கள் புதுக்குடியிருப்பு சென்று கண்ணாடி எடுக்காமல் போயிருந்தால் ஈழநாதம் பத்திரிகை இறுதிநாட்களில் வெளிவந்திருக்காது, தேவிபுரத்தில் எறிகணைத்தாக்குதலில் இயந்திரங்கள் சேதமடைந்தாலும் அவற்றினை வாகனத்தில் ஏற்றி இரணைப்பாலையில் நிறுத்தி வைத்திருந்தோம். சேதமடைந்தவற்றை திருத்தியமைத்து மீண்டும் பத்திரிகையை எப்படி நாங்கள் அச்சிட்டோம் என்பதை விரிவாக எழுதுவேன்." என தனது முக நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற இறுதிப் போரின் ஏராளமான நினைவுகள் queenlanka தமிழ் இணையத்தளம் வாயிலாக இனிவரும் நாட்களில் வெளிவரும். அன்றைய நாட்களின் கனத்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொள்வதாயின் உங்கள் ஞாபக மீட்டல்களை எமது sujithiransuji199@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.




No comments