வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான விமான சேவையினை ஏற்...
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான விமான சேவையினை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட வணிக மாநாடு ஒன்றின்போதே தம்மிக்க பெரேரா என்ற வணிகர் இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்று புலம்பெயர் தமிழர்கள் முறையிடுகிறார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள தமது உறவுகளைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வரும் அவர்கள், விமானம் மூலமாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லமுடியவில்லை என குறைப்படுகின்றனர்” என்றார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்,
“யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்றார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி தூதுவர் உரையாற்றுகையில்,
“ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த குறைபாடுகள் எதிர்காலத்தில் நிவர்த்திசெய்யப்படும் என்ற சாரப்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியதாக கூறப்பட்டுள்ளது.


No comments