யாழ்.மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்! நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு; தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி மன்னார் மன...
யாழ்.மண்டைதீவிலும்
மனிதப் புதைகுழிகள்!
மனிதப் புதைகுழிகள்!
நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு;
தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி
தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் இன்று வலியுறுத்தினார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் – மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும், செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றைத் தோண்டியெடுக்க நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்..
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதும் சிறிதரன் எம்.பி. இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக போர்க்காலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டனர் என்று அவர் கூறினார். அவற்றை இராணுவத்தினர் சீமெந்து இட்டு மூடியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றைத் தோண்டியெடுத்து, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு, இலங்கையில் இறுதிப் போரின்போது இரசாயன ஆயுதங்கள் - குண்டுகள் பயன்படுத்தப்பட்டன எனக் குறிப்பிட்ட சிறிதரன் எம்.பி., அவ்வாறு பயன்படுத்தப்படாவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைக்கு அரசு அஞ்சவேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
இரசாயனக் குண்டுகளின் தாக்கம் வன்னியில் இன்றும் காணப்படுகின்றது எனவும், அதனால் பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
சிறிதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்தார்.
அதாவது தமது அமைச்சின் கீழ் காணாமல்போனோர் அலுவலகம் வருகின்ற நிலையில், மண்டைதீவு புதைகுழிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இவ்விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறும், தாம் அந்தப் புதைகுழிகளைத் தோண்டியெடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ கூறினார்.



No comments