தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இந்த நினைவ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவையும் யாழ். நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனையடுத்து திட்டமிட்டவாறு நாளைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவு தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பந்தல் அமைக்கப்பட்டு திலீபனின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சர்வதேச நாடுகளினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் திலீபனை நல்லூரில் நினைவுகூருவதைத் தடை செய்யுமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் மனு தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த மனுவினை யாழ்ப்பாணம் நீதிவானிடம் கையளித்தனர்
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலி, அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், மற்றும் திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு நீதிமன்றம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ் மாநரக ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார் முன்வைத்த விண்ணப்பம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனை இன்று யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கக் கூடாதென்றும், நினைவுகூரும் உரிமை உண்டென கோரியும், ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாந்தா அபிமன்யுசிங்கம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினார்கள்..
இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் பொலிஸாரின் மனுவினை தள்ளுபடி செய்துள்ளதாக யாழ் மாநகர சபை சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசேட வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ்.நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.



No comments