கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட கொரோனா ப...
கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஆங்காங்கே பரவி வருகிறது.
இந்நிலையில்தான் சைபர் கொரோனா என்ற சொல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆம். இணைய உலகில் கொரோனா வைரஸை வைத்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது!
கொரோனாவின் கறுப்புச் சந்தைசென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ‘லாக்டவுன்’களை அரசுகள் அறிவித்தன. அதனால் கடைகளுக்கு படையெடுத்த கூட்டம், தங்கள் தேவைக்கு மீறி கடன் அட்டைகளைக் கொண்டு பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் பலருக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போனது.
மறுபக்கம் கொரோனா வைரஸை தடுக்கத் தேவையான சானிடைசர்கள், மாஸ்க்குகள், இதர மருத்துவப் பொருட்கள் கிடைப்பதில் பெரிய தட்டுப்பாடு நிலவியது. இந்த நேரத்தில் சைபரில் கள்ளத்தனமாக பொருட்களை விற்கும் டார்க் வெப் (Dark Web) இணையதளங்களில் மேலே குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களும், மருத்துவப் பொருட்களின் விற்பனையும் தொடங்கியது.
அதாவது லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் ஐரோப்பாவில் சில மாஃபியாக்கள் இந்த பொருட்களை வாங்கி பெருமளவு பதுக்கிவிட்டார்கள். சரியான நேரத்தில் பல மடங்கு லாபம் வைத்து கள்ளச் சந்தையில் இறக்கிவிட்டார்கள். வெளிப்படையாக கள்ளச் சந்தையில் விற்றால் அரசு கண்காணித்து பிடித்துவிடும்.
அதனால் மிகவும் பாதுகாப்பாக டார்க் வெப்பில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளார்கள். அது என்ன டார்க் வெப்? நாம் சாதாரண வலைத்தளங்களை (அமேசான், ஃப்ளிப்கார்ட்) பயன்படுத்தி பொருட்களை வாங்குகிறோம் அல்லவா..? அதேபோல டார்க் வெப் என்பது ரகசியமாக இயங்கும் வலைஉலகம்.
இங்கு யார் விற்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக இருக்கும். அரசு நினைத்தால்கூட கண்டுபிடிக்க முடியாத டிஜிட்டல் பாதாள உலகம் இது! இங்கு பொதுவாக போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட மருந்துகள், சிறார் பாலியல் படங்கள்... என அரசால் தடை செய்யப்பட்ட அனைத்தும் பகிரங்கமாக விற்கப்படும்.
கொரோனா காலத்தில் சானிடைசர்கள், பால் பவுடர்கள் எல்லாம் டார்க் வெப் கள்ளச் சந்தைக்கு வந்ததுதான் அவலம்.
ஒரு லட்சம் புது கொரோனா வலைத்தளங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் கொரோனா, கோவிட் 19 போன்ற தகவல்களைக் கொண்டு புதிதாக சுமார் 1 லட்சம் வலைத்தளங்கள் பதியப்பட்டு, வலை உலகில் முளைத்திருக்கின்றன! அதாவது ஒரே மாதத்தில்!
‘கொரோனா’ என்ற குறிச்சொல்தான் இணையத்தின் ‘ஹிட்’ என்பதால் கொரோனா கால சமையல் குறிப்புகள் முதல் பசும் மஞ்சளைச் சாப்பிட்டால் கொரோனா வராது என்பது போன்ற மருத்துவக் குறிப்புகள் வரை இணையத்தில் கொரோனா சக்கைப்போடு போட்டது. இந்த வலைத்தளங்களில் 90% முழுக்க முழுக்க சைபர் விஷமிகளால் திருட்டு வேலைகளுக்காக தொடங்கப்பட்டவை என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா காலத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முதல் டிஜிட்டலில் மக்கள் தங்கள் பொழுதைப் போக்குவது வரை இருந்ததை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.பயனாளர்களின் பாஸ்வேர்டை ஹேக் செய்வது, அவர்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் உள்ள அந்தரங்கத் தகவல்களைத் திருடுவது என தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
எப்படி என்று கேட்கிறீர்களா? சிம்பிள். வங்கிக் கணக்கு விவரங்கள், டிஜிட்டல் வாலட்களில் இருந்து பணத்தைத் திருடுவது முதல் அந்தரங்கத் தகவல்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது வரை சகலத்தையும் அரங்கேற்றியுள்ளனர். மட்டுமல்ல. டார்க் வெப்பில் இந்த மாதிரியான பல ஆயிரம் தகவல்களைக் கொண்ட ஃபைல்களை நல்ல லாபத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
நம்புங்கள். பலரது அந்தரங்கத் தகவல்கள் டார்க் வெப்பில் பல லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளன! நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், லேப்டாப் என்பவை வெறும் கருவிகள் மட்டுமல்ல. நம் சொந்த நிதி ஆதாரங்களையும் அந்தரங்கத் தகவல்களையும் அதில்தான் சேமித்து வைக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை இந்தத் தகவல்களுக்கு பெரிய மதிப்பில்லை. ஆனால், ஹேக்கர்களுக்கு அவை பல ஆயிரம் டாலர்களைப் பெற்றுத் தரும்
அட்சயபாத்திரம்.
உதாரணமாக, இணையம் வழியே வங்கிப் பரிவர்த்தனை செய்யும் நூறு பேரை ஹேக் செய்து அவர்களது பாஸ்வேர்டுகளைத் திருடி இவற்றை மொத்தமாக டார்க் வெப்பில் விற்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.இந்த நூறு பேரும் மாதச் சம்பளம் வாங்குபவர்கள். சராசரி யாக ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் பெறுபவர்கள் என்றால்... அந்த சம்பளமும் வங்கிகளில் கிரெடிட் ஆகிறது என்றால்... டார்க் வெப்பில் இந்த நூறு பேரின் பாஸ்வேர்டையும் மொத்தமாக வாங்குபவர் மாதாமாதம் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் திருட்டுத்தனமாக கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கலாம்.
அதாவது சராசரியாக ஒவ்வொருவர் கணக்கில் இருந்தும் மாதம் ரூபாய் ஆயிரம் எடுத்தால் கூட நூறு பேரையும் சேர்த்து திருடுபவருக்கு மாதம் ரூபாய் ஒரு லட்சம் கிடைக்கும்! அதேநேரம் தனது வங்கிக் கணக்கில் மாதாமாதம் ரூபாய் ஆயிரம் குறைவதை சம்பந்தப்பட்டவர் பெரிதுபடுத்த மாட்டார். வங்கிதான் ஏதோ காரணத்துக்காக ரூபாய் ஆயிரத்தை எடுக்கிறது என்று நினைப்பார்!
இந்தக் கொள்ளைதான் ‘சைபர் கொரோனா’ என அழைக்கப்படுகிறது!எனவே, நம் உடலை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ... நம் மனநிலையை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ... அவ்வளவு அவசியம் நம் டிஜிட்டல் வாழ்க்கையை (தகவல்களை) பாதுகாப்பது!



No comments