சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கருஜயசூரிய இ...
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று அறிவித்தாலும் இந்த வாக்கெடுப்பை ஏற்கமுடியாதென மைத்திரி மகிந்த கூட்டணியில் இருக்கும் தரப்புகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நாளை பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சிறப்புஉரையொன்றை வழங்கவுள்ளதாக மைத்ரி - மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்த வாசுதேவ, இந்தக் கடிதத்தில் இன்றைய தினம் நாடாளுமன்றில் 100 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு கையளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெரியப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
எனினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சபாநாயகரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று மைத்ரி - மஹிந்த அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிரடியாக நியமிக்கப்பட்ட முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜே.வி.பி யினர் இன்றைய தினம் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்திருந்தனர். இதற்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 102 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜே.வி.பி யின் உறுப்பினர்கள் இதற்கு கையெழுத்திட்டிருந்த நிலையில் ஆளும் மற்றும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் வாய்மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டதாக அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் குழப்பம் நீடித்ததால் நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைத்தார்.



No comments