கடந்த வருடங்களைப் போல இவ்வாண்டும், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்ப...
கடந்த வருடங்களைப் போல இவ்வாண்டும், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
27.11.2018 மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத மாவீரர் துயிலுமில்லங்களை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டு, அங்கிருந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளும், நடுகற்களும், சிதைக்கப்பட்டன.
அதற்குப் பின்னரும், இந்த இடங்களில் தமிழ்மக்கள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்பதற்காக, துயிலுமில்லங்களின் மீது படைத்தளங்களை அமைத்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, வன்னியில் உள்ள சில துயிலுமில்லங்களில் இருந்து சிறிலங்கா படையினர் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம், யாழ்.மாவட்டத்தில் உள்ள உடுத்துறை துயிலுமில்லம் என்பன, பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது கனகபுரம் துயிலுமில்லத்தின் துப்புரவு பணிகள் உருத்திரம், செல்வநகர், ஜெயந்திநகர், திருநகர், முறிப்பு, அம்பாள்குளம் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் மக்களால், ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஏனைய பிரதேச மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசியம் தழுவிய அளவில் தமிழ் தேசிய மாவீரர் நாள் வெகு எழுச்சியாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments