7 வயதுச் சிறுமி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தியதுடன் அவரைக் கொடுமைப்படுத்திய குற்றவாளி...
7 வயதுச் சிறுமி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தியதுடன் அவரைக் கொடுமைப்படுத்திய குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று தீர்ப்பளித்தார்.
“எதிரி மீதான முதலாவது குற்றச்சாட்டான பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்றமை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகிறது. அதனால் அவருக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டாவது குற்றச்சாட்டான சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியமை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையால், குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
இரண்டு சிறைத் தண்டனைகளையும் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 10 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். தண்டப் பணமாக 10 ஆயிரம் ரூபா குற்றவாளியிடம் அறவிடப்படவேண்டும். அதனை அறிவிட முடியாவின் குற்றவாளி 10 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவில் 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ஆம் திகதி 7 வயது சிறுமியொருவர் அவரது பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த வேளை, 19 வயது இளைஞரொருவரால் கடத்தப்பட்டார். சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன் சித்திரவதைகளுக்கும் உள்ளானார்.
இளைஞனிடமிருந்து சிறுமியை மீட்ட உறவினர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்த்தனர். மருத்துவர்களால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதால் சிறுமி உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றால் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு உட்படுத்தபட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு கடந்த வருடம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சந்தேகநபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், எதிரிக்கு எதிராக சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரின் மிக முக்கிய சாட்சியங்கள் மன்றில் முற்படுத்தப்பட்டன. வழக்கை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தினார்.
வழக்குத் தொடுனர் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் - தொகுப்புரைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் .இன்று தீர்ப்பளித்தது.



No comments