எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...
காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ என்கிற பிரபல நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப்புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசில் இளையராஜா தங்களது நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை இல்லாமல் பயன்படுத்தியாக புகார் அளித்திருந்தார்.
இளையராஜாவின் புகாரை வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்களது நிறுவனத்திடமிருந்து 20,000 காம்பாக்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்தனர், இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு அவர் உரிமை கோர முடியாது ஏனென்றால் அவர் பணம் வாங்கிக் கொண்டு தான் இசையமைத்து வருகிறார் என்று எக்கோ நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றும் இந்த பிரச்சனை ஒரு சிவில் பிரச்சனை என்றும் இந்த சர்ச்சை தொடர்பாக பல வழக்குகள் கீழ் நீதிமன்றத்தில் உள்ளதாக எக்கோ நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே இதில் இளையராஜா கிரிமினல் புகார் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை அதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த்து.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.முரளீதரன் இந்த பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதனால் கிரிமினல் புகார் அளிக்க முடியாது என்று கூறி இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.



No comments